எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது!

309 0

ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது.

அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்ற கோட்பாட்டுடன் மேடையேறியது. இவனா நண்பன் என்ற மண் மணம் சுமந்த நாட்டுக்கூத்து. இதில் எம்மேடைகளுக்கு முற்றிலும் புதிதான இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுள் ஒருவனாக உள்வந்த ஒரு கவிஞன் அன்று முதல் தன்னை தன் தேசத்தின் விடுதலைச் செயற்பாட்டுடன் இணைத்துக் கொண்டான்.

ஆம் நாம் எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது. இலக்கியச் சிந்தனை விடுதலை தாகம் சமூக பொறுப்புணர்வுமிக்க ஒரு முற்போக்கு கவிஞனாகவே எமது விடுதலை இயக்கம் கயனை உருவாக்கியது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ஒரு நடுத்தர வர்க்க உழைப்பாளர் குடும்பத்தின் தலைமகனாக பிறந்த கயன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவன். இனவாத புயல் எம் தேசத்தின் வேலிகளை பிய்த்தெறிந்த போது பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற மரப ரீதியான சமூக நியதியினால் கட்டாயத்தின் நிமித்தம். இந்த மேற்குலகு நோக்கி பயணித்தவன்.

தன் சகோதரர்களை ஆழமாக நேசித்த அவன் தன் இளமைப் பொழுதுகளை பாரிஸ் நகரத்தின் அடிப்படைத் தொழிலாளர் வர்க்கத்துடன் கலந்தே பணியாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டான். குடும்பப் பாசம் கொண்ட கயன் மௌனமாக இருந்தாலும் அவனுக்குள் எழுந்த விடுதலை தாகம் அவனை நீண்டகாலம் மௌனிக்கவிடவில்லை. தன் குடும்பத்தை கவனித்தவாறு தன் போனாவினால் அடக்குமுறை மீது போர்த் தொடுத்தான். இயக்கத்தின் கலை பண்பாட்டு பிரிவிற்காக கலாச்சாரம் என்கின்ற பத்திரிகையை உருவாக்கி அதன் ஆசிரியனாகவும் சில காலம் பங்கேற்றான். கயன் தன் அனுபவங்களை சரியான கோணத்தினுள் உள்வாங்கி அதனை தன் எண்ணங்களினால் செழுமைப்படுத்தி அவற்றை தன் போனாவினுள் நிரப்பி சமூகத்தின் விழிப்புணர்வுக்கான ஆயுதமாக்கினான். கலாச்சாரம் இதழில் அவன் பெற்ற அனுபவம் பிற்காலத்தில் அவனால் ஈழமுரசு என்னும் வார இதழை உருவாக்க முடிந்தது.

இரு ஆண்டுகளுக்கு மேலாக எமது இயக்கத்தின் பகுதி நேர தொண்டனாக இயங்கிய கயன் இயக்கத் தேவைகள் அதிகரித்த போது தன் முழுமையான விடுதலைப் புலி உறுப்பினனாக இணைத்துக் கொண்டான். எமது மூத்த தளபதி கிட்டு அவர்கள் இலண்டனில் குடிகொண்டு அங்கு சர்வதேச தலைமைச் செயலகத்தை வைத்து அனைத்துலக தொடர்பகம் என செயற்பட தொடங்கிய போது அவருக்கு உதவியாக இயங்குவதற்கு பிரெஞ்சு பணியகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் கயன்.

தளபதி கிட்டுவின் ஆளுமை மிக்க வழிகாட்டல் அனுபவம் நிறைந்த அறிவுரைகள் சிந்தனைமிக்க செயற்பாடுகள் என்பன அவருடன் முழுமையாகப் பணிபுரிந்த எமது இயக்கத் தோழர்களை செழுமைப்படுத்தி நெறிப்படுத்தியது. கயன் தளபதி கிட்டுவின் புலம்பெயர் வாழ்வில் அதிக காலம் அவருடன் வாழ்ந்த இயக்க உறுப்பினர். எம்மைப் போல கிட்டுவிடம் பேச்சுவாங்கி வளர்ந்தவன் கயன். பிற்காலத்தில் கயனின் செயற்பாடுகளில் இந்த அடையாளங்கள் பல்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தப்பட்டதை நாங்கள் கண்டிருக்கின்றோம்.

ஈழமுரசு வார இதழை உருவாக்கி அதனை புலம்பெயர்வாழ் மக்களின் தகவல் தொடர்பு மற்றும் கலை பண்பாட்டு ஊடகமாக உருமாற்றிய கயனின் எழுத்தாற்றல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சர்வதேசப் பதிப்பான களத்தில் மற்றும் எரிமலை மாத இதழ்களில் வெளிப்பட்டது. இயக்க கலை மாலை கலை பண்பாட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட ஜீவகானங்கள் மற்றும் ஜீவராகங்கள் ஒலிப்பதிவு நாடாக்களில் அவன் பதித்த கவிதை வரிகள் பல்துறைப் பரிமாணங்களைத் தொட்டு நின்றது.

அவன் மக்கள் போர் பற்றி பரணி பாடினான். கண்ணோடு ஒரு கனவு என அவன் எழுதிய பாடல் அவனது கவித்துவத்திற்கு ஒரு சான்றாகும். கயன் மக்கள் மொழி புரிந்தவன். சிரிக்கச் சிரிக்க அவனால் கதை சொல்ல முடியும். தன்னோடு இருக்கும் நண்பர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களுடைய ஆற்றல்களை வெளிக்கொணரவும் அவனால் முடியும் அவனோடு பழகாமல் அவனை மேலோட்டமாகப் பார்த்தவர்கள் அவனை புரிந்துக் கொள்ள சிரமமப்படுவர். ஏனெனில் அவன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனக்குத் தானே அமைத்து வைத்திருந்த ஒரு தனிமைத் தோற்றம் அப்படியாய் இருந்தது.

ஆனால் அந்தப் பிரமையை ஒரு புதிய இயக்க உறுப்பினராய் கூட இலகுவாக உடைத்து விட முடியும். அதனை தடுக்கும் ஆற்றல் கயனிடம் இல்லை. ஏனெனில் தோழமை உணர்வு என்பது அவனால் எதிர்த்து நிற்க முடியாத ஆயுதம். உண்மையான போலித்தனமற்ற கவிஞனாக வாழ்ந்த அவன் எழுதி வைத்த கவிதைகள் அவன் இறப்பால் எமக்கு உருவாக்கிய இடைவெளியை என்றும் ஈடு செய்யும். கயன் என்ற போராளி எம் தேசத்தின் உயர்வுக்காக உலக வரலாறு இருக்கும் வரை பரணி பாடுவான்.

நீளும் நினைவுகள்.!

மண்ணைத் தேடும் இராகங்கள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave a comment