கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில் அனுமதி

8734 0
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறாா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு  அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனா்
குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர்  மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும்  உட்காயங்கள் இருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ  அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதேவேளை நேற்று குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்று இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில்   தனக்கு நிகழ்ந்து சித்திரவதை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தமையினை தொடர்ந்தே குறித்த விடயம் வெளியில்  தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே அதிகாரிகளால் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறவா்கள்  சித்திரவதைக்குள்ளான சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன் இடம்பெற்றது எனத்  தகவல்கள் தொிவிக்கின்றன.
தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை சிறுவா்கள் வெளியில் தெரிவிக்க அச்சமடைந்து காணப்படுகின்றனா் எனவும் எனவேதான் அவர்களை  சிறுவா் இல்லத்திலிருந்து வெளியே எடுத்து வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
 குறித்த சிறுவர் இல்லத்தில் யுத்தத்தில் தாய், தந்தை, பெற்றோர்களை இழந்த சிறுவா்களும், சிறுமிகளும், மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளனா். போரினால் ஏற்பட்ட பல்வேறு உளவியல்  தாக்கங்களுக்கு உள்ளான சிறுவா்கள் தங்களின் நிலைமையினை கருதி சிறுவா் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கும் அவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிறுவா்களை வைத்தியசாலையில் அனுமத்தித்தன் பின்னர் வைத்தியசாலை பொலீஸாருக்கு தகவலை வழங்கியுள்ளதோடு, கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனா்.

Leave a comment