வடகொரியா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் அவதானம்

388 0

கிம் ஜாங் உன்-இன் வட கொரிய நிர்வாகம் தனது இறுதி ஆயுதமாக அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தும் அவதானம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

வட கொரியா மற்றும் தென் கொரியவுக்கு இடையிலான பாரம்பரிய போரில் வட கொரியா நிச்சயம் தோல்வியடையும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பின் கிலிண்டனின் பாதுகாப்பு செயலாளர் ஜே பெரி குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவின் நிர்வாகம் வீழ்ச்சியடையும் நிலைக்கு வரும் போது அவர்கள் அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்பதுடன், அத் தாக்குதல் சோல் மற்றும் டொக்கியோ நகரங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜே பெரி தெரிவித்துள்ளார்.

இதன் காரகணமாக வட கொரியாவை முழுமையாக தோல்வியடைய செய்வதற்கு முன்னர், 10 மில்லியன் பேர் வரையில் உயிரிழக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
000000000
நேற் சூறாவளி – 22 பேர் பலி, 20 பேரை காணவில்லை
கொஸ்டரிகா, நிக்கராகுவா மற்றும் ஹொண்டூரஸ் ஆகிய நாடுகளை தாக்கிய நேற் என நாமகரணமிடப்பட்டுள்ள சூறாவளி காரணமாக குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 20 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த நாடுகளில் பாரிய மழை தொடர்ந்தும் பெய்வதனால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன.

இதன்காரணமாக வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் என்பன சேதமடைந்துள்ளன.

இதையடுத்து, மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நாடுகளில், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த சூறாவளி அமெரிக்காவின் வடபகுதியை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கொஸ்டரிக்காவில் உள்ள சுமார் 4 லட்சம் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரூந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல வாநூர்தி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

000000000
முன்னாள் நீதியரசரின் மனுவுக்கு எதிராக மேலும் 4 மனுக்கள்
மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சட்டதரணி ரஜிக கொடித்துவக்கு, புரவெசி பலய அமைப்பின் இணைப்பாளர் காமினி வியாங்கொட உட்பட நான்கு பேர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமானது, சட்டத்திற்கு முரணான வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறி முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவினால், கடந்த 28ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, மாகாண சபை தேர்தல்களை விரைவு படுத்தும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதயகம்மன்பில உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்துள்ளார்.

000000000
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம் என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்துவதைக் கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும்.

வவுனியா நீதிமன்றத்திலேயே குறிப்பாக தமிழ் பகுதிகளில் தமது வழக்கு நடவடிக்கைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிக்குப் புறம்பான வகையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

0000000000
திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை அபிவிருத்தி செய்ய பேச்சுவார்த்தை

திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீதி, பெற்ரோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுக மற்றும் மின்சக்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் இணைந்து தொழிற்படும் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

தற்போது இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையே இந்த குழுவின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விடயம் குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகள் தற்போது எல்.ஐ.ஓ.சீ நிறுவனத்தினால் உபயோகிக்கப்படுகிறது.

ஏனைய தாங்கிகள் குறித்தே இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே தற்போதைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0000000000
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு – தாழ்நிலப்பகுதியில் மக்கள் அவதானம்
நிலவும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் இங்கிரிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை காலநிலை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் 100 மில்லிமீற்றர் வரையில் அடை மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மழை காலநில காரணமாக இரத்தினபுரி மாவட்டத்துக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
000000000000
ஹம்பாந்தோட்டை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – 28 பேர் விளக்கமறியலில்
ஒன்றிணைந்த எதிரணியினரால் ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பெண்கள் உட்பட 28 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நேற்றிரவு 10 மணியளவில் ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோதல் சம்பவம் இடம்பெற்றபோது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தநிலையில் காயமடைந்த 4 காவல்துறையினர் ஹம்பாந்தோட்டை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டை – மத்தள விமான நிலையத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஒன்றிணைந்த எதிரணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தில் கோரிக்கை மனு ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக அங்குள்ள எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

0000000000000
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டபோதும், பின்னர் அது கைவிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அவதானிப்புக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய இலங்கையின் நீண்டகால வரலாற்றில் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து விலக்கீடு பெறுவதை தடுக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் ஒரு முற்போக்கானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதையும், தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தச் சட்டமூலம் சாத்தியமாக்குகின்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான தனிச் சிறப்பை வழங்கும் இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

 

Leave a comment