அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது – சசிகலாவின் பரோல் நிபந்தனை

275 0

ஐந்து நாட்கள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா உடல்நலம் பாதித்த தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா இன்று வெளியே வந்தார். சென்னை வரும் அவர் தியாகராயநகரில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் தங்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது.
பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவிற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டும். அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. வீடு, மருத்துவமனை தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதி. நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்லலாம்.
ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது. பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது. தாமாகவே எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது. வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை. கட்சி தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. சென்னையில் வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் இருப்பதால் சாட்சிகளை கலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment