வங்காளதேசத்துக்கு 4.5 பில்லியன் டாலர் கடன்: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா

231 0

வங்காளதேச அரசுக்கு 4.5 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது.

இந்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அரசுமுறைப் பயணமான வங்காளதேசத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டாக்காவில் அவர் வங்காளதேச நிதி மந்திரி ஏ.எம்.ஏ.முகித்தை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வங்காளதேசத்தின் மேம்பாட்டிற்காக 4.5 பில்லியன் டாலர் கடன் வழங்கும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அருண் ஜெட்லி மற்றும் ஏ.எம்.ஏ.முகித் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது பேசிய அருண் ஜெட்லி, கடந்த 7 ஆண்டுகளில் வங்காளதேசம் பொருளாதர ரீதியாக மிகுந்த வளர்ச்சியடைந்து இருக்கிறது. மேலும், வளர்ச்சியடைய இந்தியா உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டாகும் என கூறினார்.

வங்காளதேச நிதி மந்திரி முகித் பேசுகையில், எங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. அவர்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். அது எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம், என கூறினார்.

கடன் வழங்குவது குறித்த தகவலை கடந்த ஏப்ரல் மாதம் வங்காளதேச பிரதமர் இந்தியா வந்த போது அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததில் இந்தியா சார்பாக ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் இயக்குநர் டேவிட் ராஸ்குன்காவும், பங்களாதேஷ் சார்பாக பொருளாதாரத்துறை செயலாளர் காசி ஷோஃபிகுல் அசாமும் கையெழுத்திட்டனர்.

இந்த தொகையை அந்நாட்டின் முக்கிய 17 திட்டங்களை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். இந்த கடனை ஆண்டிற்கு 1 சதவீதம் வட்டி என்ற வீதத்தில் 20 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மேலும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்காளதேச அரசு 65-75 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

இதற்கு முன் வங்காளதேசம் – இந்தியா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது மூன்றாவது ஒப்பந்தமாகும்.

Leave a comment