கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: 300 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல்

1365 0

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகையை கோத்தகிரி கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில் 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர் விலை உயர்ந்த பொருட்களையும், முக்கிய ஆவணங்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பத்து பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரள கூலிப்படையை சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ், சேலம் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பான 300 பக்க குற்றப்பத்திரிக்கையை கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் நேற்று தாக்கல் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் கூறுகையில், ‘10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 4½ மாதங்களாக நடந்த புலன் விசாரணையில் 69 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.

Leave a comment