‘நீட்’ தேர்வுக்கு எதிராக கடைசிவரை போராடினேன்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

9116 0

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசிவரை முயன்றேன். துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய் விட்டது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நன்றாக படிக்கக் கூடிய, மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவரை இழந்தது நம் எல்லோருக்கும் இழப்பு. இதை விட பெரிய இழப்பு எதுவும் இருக்க முடியாது.நான் அளித்த வாக்குறுதிப்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற என்னால் முயன்ற அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

இது தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டின் முடிவால் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லாததாகி விட்டது.நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

தமிழகத்துக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியபோது, ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்ற உண்மை நிலையை மத்திய அரசு கூறியதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ப தால்தான் கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்களுடன் பலமுறை பேச்சு நடத்தி முயற்சிகள் மேற்கொண்டேன். நானும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் பிரதமர் மோடியை சந்தித்தோம்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசிவரை முயன்றேன். துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய் விட்டது.இது தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபட நான் விரும்பவில்லை. மாணவி தற்கொலைக்கு யார் மீது யார் பழிபோடலாம் என அரசியல் செய்ய வேண்டாம். இது தொடர்பாக மேலும் பேச விரும்பவில்லை.

பாதுகாப்பு துறை மந்திரி பதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, நிதின்கட்கரி உள்ளிட்ட மூத்த மந்திரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a comment