காணாமற் ஆக்கப்பட்டோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – சுவிஸ் 30. 08. 2017

7420 0

பூமிப்பந்து வேகமாக சுழல்கின்றது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வரவுகளாய்க் கண்டுபிடிப்புக்கள். விஞ்ஞானத்தின் வியத்தகு விந்தைகள்
மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை நோக்கிப் பயணிக்கின்றான். அவனது ஆற்றல் உலகையே அதிசயிக்க வைக்கின்றது. இது ஒருபுறம் இருக்க.
மனிதனை மனிதன் வேட்டையாடும் ஈனச் செயல் இன்று காணாமல் போனோர் என்ற புதிய அடையாளத்தை உலகுக்குத் தந்திருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் 1980 களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். தனிச் சிங்களச் சட்டம், கல்வியில் தரப்படுத்தல், தமிழ் மக்களின் நிலப்பறிப்பு, திட்டமிட்ட தமிழின அழிப்பு என தமிழர்களின் இருப்பே கேள்வியானது. இளையோர்களின் கனவு சிதைக்கப்பட்டன. அன்று தொடங்கியது இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தொடக்கப்புள்ளி. ஒருவர் இருவராய் அங்கொன்று இங்கொன்றாய் காணாமல் ஆக்கப்பட்டு பின்னாளில் கொத்துக் கொத்தாய் அரசபடைகளால் வெள்ளைவான்களிலும், நேரடியாகவும் பெற்றவர் கண்முன்னே உறவுகள் கதறக் கதற அரங்கேறியது.

கேட்பதற்கும் யாருமில்லை திறந்தவெளிச் சிறைக்குள் மக்கள் தவித்தார்கள். எந்த வீட்டுக் கதவு எப்போது தட்டப்படும் எந்தப்பிள்ளை கண்முன்னே பறிக்கப்படும் என்ற அச்சத்தில். தங்கள் குஞ்சுகளை சிறகுகளுக்குள் அடைகாக்க முடியாமல் தத்தளித்தார்கள். மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசபடைகளே தமிழ் உறவுகளைக் காணாமல போகச் செய்தனர்;. வயதுபேதம் பார்க்கவில்லை, ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை. பள்ளிச் சிறார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள், ஏதுமறியா என நாளுக்கு நாள் காணாமல் போதல்கள் தொடர்ந்தன. தமிழினம் மனிதப்பேரவலத்தைச் சந்தித்த இறுதிக்கட்டப் போரின் முடிவுநாட்களில் வகைதொகையாய் எம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

சிறிலங்கா அரசபடைகளிடம் தம்பிள்ளைகளை, கணவன்மாரை, உறவுகளை சரணடைய வைத்தவர்களுக்கும், வெள்ளைக்கொடி தாங்கி அரசபடைகளிடம் சரணடைய வைத்தவர்களுக்கும் எங்கே என்ற கேள்விக்கு இன்றுவரை முடிவில்லை. முதுமையின் மடியில் துவண்டு தம்வாழ்வில் ஆதரவின்றி தம் பிள்ளைகளின் வருகைக்காய் உயிர்கூடுகளைப் பிடித்தபடி ஏக்கத்தோடு காத்திருக்கும் பெற்றோர்கள், இளமைக் கனவுகளைத் தொலைத்து தம் கணவன்மார் மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு பூவோடும் பொட்டோடும் காத்திருக்கும் மனைவியர்கள்,
அப்பா எங்கே……?
அவர் என்ன வேலை…….?
அவர் உங்களைப் பள்ளிக்கு அழைத்துவருவதில்லையா………?
அப்பாவோடு நீங்கள் வெளியில் செல்வதில்லையா……….?
எனப் பள்ளித்தோழர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லத்தெரியாது கண்ணீரோடு தடுமாறிப்போகும் சிறுசுகள் புகைப்படத்தில் மட்டும் பார்த்த அப்பாவின் அன்புக்காய் ஏங்கிக்கிடக்கும் எங்கள் குஞ்சுகள். அண்ணன் தம்பிகளின் வருகைக்காய் கனவுகள் சுமந்து காத்திருக்கும் அக்கா தங்கைகள்.

எத்தனை ஆணைக்குழுக்கள்.
எத்தனை சாட்சியங்கள்.
எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.
எத்தனை மகஐர் கையளிப்புக்கள்.
எத்தனை பேச்சுவார்த்தைகள்.
எத்தனை உண்ணாவிரதங்கள்.
அத்தனைக்கும் சோராது தங்களின் பிள்ளைகளின் வருகைக்காய் தெருவில் இறங்கி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் எம்உறவுகளுக்கு நீதி வேண்டும்.

உலகத்தின் மனச்சாட்சிகளே! ஒருமுறை எங்கள் குரல்களைக் கேளுங்கள். எம் உறவகளின் கண்ணீருக்கு விடுதலைவேண்டித் தாருங்கள். காணாமல் போன பிள்ளைகளின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுத்தாருங்கள். இதுவே இன்றைய நாளில் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் உறவுகளுக்கு நீங்கள் செய்யும் பெருங்கடன்.

https://youtu.be/Jplpvszz9sQ
காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கேட்டு நடாத்தப்படும் இவ் மனுவில் அனைவரையும் கையொப்பமிட்டு வலுச்சேர்க்குமாறும் வேண்டி நிற்கின்றோம்.
https://www.gfbv.ch/de/petition/sri-lanka-gewissheit-ueber-den-verbleib-von-gewaltsam-verschwundenen/

 

Leave a comment