எடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம்

232 0

எடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். அந்த வியூகத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளனர்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு தற்போது 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 22 பேர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆதரவாக சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக 30 முதல் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 87 எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

ஆட்சி நீடிக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை பலம் இல்லாமல் போய் விடும்.

ஓ.பி.எஸ். அணியின் 11 எம்.எல்.ஏக்கள் கை கொடுத்தால் கூட பெரும்பான்மை பலத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இதனால்தான் 22 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கும் துணிச்சலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் மிரட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ‘‘ஆட்சியை விட கட்சியே எங்களுக்கு முக்கியம்’’ என்று அவர் கூறி வருகிறார்.

எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்பட்டால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் டி.டி.வி.தினகரன் ஈடுபடக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலை உருவாகத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்கும் முயற்சியை தொடங்கி இருக்கிறது. இதுவரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை.

அ.தி.மு.க. ஆட்சி தானாக கவிழ்ந்து விடும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் ஆட்சியை கவிழ விட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். அந்த வியூகத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

கடந்த வாரம் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘தேவைப்பட்டால் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும்’’ என்றார். இதன் தொடர்ச்சியாக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.

அந்த குழுவில் இருப்பவர்கள், தங்கள் திட்டத்தின்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்க தொடங்கி இருப்பதாக தி.மு.க. மூத்த தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வில் இருந்து எத்தனை எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடிகிறதோ அத்தனை பேரையும் இழுக்க தி.மு.க. தலைவர்கள் தீவிரமாகியுள்ளனர். அந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தி.மு.க.வில் நேரடியாக சேர வைப்பதற்கு பதில், வேறு வகையில் தங்களுக்கு உதவும் வகையில் செயல்பட வைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சட்டசபையில் தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் போது, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. தி.மு.க.வின் இந்த புதிய திட்டத்துக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று தி.மு.க. தலைவர்களிடம் நம்பிக்கை காணப்படுகிறது.

இது தொடர்பாக தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் சாவி டி.டி.வி.தினகரனிடம் இருப்பதாக நிறைய பேர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சாவி தி.மு.க.விடம்தான்’’ உள்ளது என்றார்.

எனவே அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் விரைவில் தி.மு.க. ஈடுபடக்கூடும். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிடும்.

 

Leave a comment