திமுகவில் ஐக்கியமாகிறதா மக்கள் தேமுதிக?

622 0

சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் தேமுதிகவை தொடங்கிய சந்திரகுமார் அணி, திமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.

இந்தக் கட்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் இணைந்தனர். திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக இணைந்தால் வரவேற்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து சட்டசபை தேர்தலில் மக்கள் தேமுதிக திமுக உடன் கூட்டணியில் இணைந்தது. சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சேகர் ஆகியோருக்கு 3 சீட் கொடுத்தது திமுக. மூவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். எப்படியும் சிட்டிங் எம்எல்ஏ பதவியை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்று பகீரத முயற்சி எடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் மூவருமே தோல்வியைச் சந்தித்தனர். இதனிடையே தங்களுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மூவரும் அலசியுள்ளனர். இதில், திமுகவுடன் இணைந்துவிடுவது குறித்து அலசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளைத் திரட்டி சென்னையில் கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளதாகவும், கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தையொட்டியே தங்களின் முடிவு இருக்கும் என்றும் எஸ் ஆர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்,

Leave a comment