அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது: திருநாவுக்கரசர்

207 0

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அ.தி.மு.க. அரசை மத்திய அரசு கலைக்க முடியாது. ஆனால் அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் எச்.வசந்த குமார் எம்.எல்.ஏ. எழுதிய வெற்றிப்படிக்கட்டு புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அனில் சாஸ்திரி புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அனில் சாஸ்திரி பேசும்போது, “தமிழகத்தில் அ.தி.மு.க. பிளவுபட்டு கிடக்கிறது. இந்த அரசியல் சூழ்நிலையை தமிழ்நாடு காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள், வாக்காளர்களை அதிகளவில் சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இதுவே உகந்த நேரம். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதே மோடியின் கொள்கையாக உள்ளது. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பசுபாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களின் தவறுகளை மறைப்பதற்காக மோடி அரசு நாள்தோறும் புதிய புதிய பெயர்களில் திட்டங்களை வெளியிடுகின்றனர்” என்று கூறினார்.

விழா முடிவில் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்றத்தில் வெளிநடப்பு இருக்குமே தவிர, வெளியேற்றம் இருக்காது. ஆனால், பா.ஜனதா ஆட்சியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளியேற்றம் செய்யப்பட்டு காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலை வந்துள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய பா.ஜனதா அரசு காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க முற்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கலையும் அ.தி.மு.க. அரசை தாங்கி பிடிக்கிறது. புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்.

ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அ.தி.மு.க.வின் 3 கோஷ்டியினரும் போட்டி போட்டுக்கொண்டு பங்கேற்கின்றனர். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாவது நிபந்தனை விதித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருக்கும் வரை நீட் தேர்வை நடத்த முடியாது என உறுதியாக இருந்தார். அவர் ஒரு வலிமையான அரசியல் தலைவர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு ஏன் பயந்து ஒடுங்கி, நடுங்குகிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதற்காக டெல்லி செல்லவில்லை. தற்போது, மோடி, அமித்ஷா தலைமையில் டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு தனக்கு அச்சுறுத்தல், கொலை மிரட்டல் இருப்பதாக கூறுகிறார். அது அரசியல் ரீதியிலான கொலைமிரட்டலாக இருந்தாலும் சரி, வேறு எவ்வித அச்சுறுத்தலாக இருந்தாலும் அதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அ.தி.மு.க. அரசை மத்திய அரசு கலைக்க முடியாது. இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சியினால் கலைக்க முடியும். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் எப்போது வரும் என தெரியவில்லை. ஆனால் அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment