ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

24884 0

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் நாட்டு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த அபு சயீது கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், உலகமெங்கும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் இயக்கத்தை ஒழிப்பதற்கான பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.

ஈராக்கில் ஐ.எஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங்களை அரசுப்படையினர் மீட்டுவிட்டனர். கிட்டத்தட்ட அழிவு நிலையை நெருங்கிவிட்ட ஐ.எஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் நாட்டு பிரிவின் தலைவர் அபு சயீது கடந்த வாரம் குனார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் ஆப்கானிய தலைவராக அபு சயீது கடந்தாண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்த்தப்பட்ட முக்கிய தாக்குதல்களில் மூல காரணமாக அபு சயீது செயல்பட்டார். இதற்கு முன்னதாக ஆப்கானிய ஐ.எஸ் தலைவர்களாக இருந்த அப்துல் ஹாசிப் மற்றும் ஹபீஸ் சயீது கான் ஆகியோரும் அரசுப்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment