வெனிசூலா வெளியுறவு மந்திரி திடீர் ராஜினாமா – அரசியல் நிர்ணய சபை தேர்தலில் போட்டி

250 0

வெனிசூலா நாட்டின் வெளியுறவு மந்திரியாக 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர், டெல்சி ரோட்ரிக்ஸ். பெண் தலைவரான இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

வெனிசூலா நாட்டின் வெளியுறவு மந்திரியாக 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர், டெல்சி ரோட்ரிக்ஸ். பெண் தலைவரான இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது துணை மந்திரி பதவியில் உள்ள சாமுவேல் மன்கடா புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ, பதவி விலகிய வெளியுறவு மந்திரி டெல்சி ரோட்ரிக்சுக்கு புகழாரம் சூட்டினார். அப்போது அவர், “ஒட்டுமொத்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதி படைத்தவர், டெல்சி ரோட்ரிக்ஸ். வெனிசூலாவின் இறையாண்மை, அமைதி, சுதந்திரம் ஆகியவற்றை ஒரு புலி போல காத்துவந்தவர் இவர்” என கூறினார்.

வெனிசூலாவில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியல் நிர்ணய சபைக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிற தேர்தலில், டெல்சி ரோட்ரிக்ஸ் போட்டியிட உள்ளார்.

இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சி புறக்கணிக்கிறது. “இந்த தேர்தல், அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு சாதகமாக நடத்தப்படும், தில்லுமுல்லுகள் அரங்கேறும், சோசலிச கட்சியை ஆட்சி அதிகாரத்தில் தக்க வைப்பதே இந்த தேர்தலின் நோக்கம்” என எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

ஆனால் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “அரசியல் நிர்ணயசபை, அரசியல் சாசனத்தை முழுமையாக மீண்டும் எழுதுவதற்கு அதிகாரம் படைத்ததாகும். 3 மாதங்களாக நடந்து வருகிற வன்முறையில் 75 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தேவையான ஒன்று” என்று கூறி உள்ளார்.

Leave a comment