பாஜக பினாமியான முதலமைச்சர் வீடு முற்றுகை- தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

289 0
தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தினை ஏவியிருக்கிறது தமிழக எடப்பாடி அரசு.
6 ஆண்டுகளாக தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் அமைதியாக எந்த தடையுமின்றி நடந்து வந்த நிகழ்வினை இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் அரசு தடை செய்திருக்கிறது. மேலும் நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்ததோடு, 4 பேர் மீது குண்டர் சட்டம் ஏவியிருப்பதை ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகவே பார்க்க முடிகிறது.
தமிழக எடப்பாடி அரசு, தமிழக செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவி வருகிறது. மத்திய பாஜக அரசின் பினாமியாக அது மாறியிருக்கிறது. 4 பேர் மீது போடப்பட்டுள்ள இந்த குண்டர் சட்டம் என்பது, அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல். கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நசுக்கப்படுவதன் துவக்கம்.
நால்வர் மீதும் போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக வருகிற 17-6-2017 சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் தமிழர்களின் நலனுக்காக உழைக்கிற அனைத்து கட்சிகளும், இயக்கங்களும், தமிழ் உணர்வாளர்களும், பொதுமக்களும் இந்த முற்றுகைப் போராட்டத்தினில் ஏராளமாகத் திரள்கிறார்கள். நம் தோழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட இந்த அநீதிக்கு நீதி கேட்போம் வாருங்கள்.

Leave a comment