தமிழ் மக்களின் நலனுக்காகவே விக்னேஸ்வரனை தண்டிக்காது விட்டுள்ளோம் – சுமந்திரன்!

290 0

தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே வட மாகாணமுதலமைச்சரை தாம் இதுவரை தண்டிக்காது விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்களுக்கெதிராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் கொண்டுவருவதற்கு அவருடன் கூடஇருப்பதாகத் தெரிவிக்கும் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் நானும் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுமே மும்முரமாக அரசியலுக்குக் கொண்டுவந்தோம். அத்துடன் அவருக்கும் முதலமைச்சர் பதவி கொடுக்கப்படவேண்டுமெனவும் முன்னின்று உழைத்தோம்.

ஆனால், கடந்த தேர்தலின்போது அவரது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகக் கதைக்காது இன்னொரு கட்சிக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருந்தார். நான் அப்போதே கட்சியின் தலைமையிடம் அவரைத் தண்டிக்கவேண்டுமெனத் தெரிவித்திருந்தேன். இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளேன்.

கட்சித் தலைமையும் அதே நிலைப்பாட்டிலிருந்தாலும், தமிழ் மக்கள் இருக்கும் இக்கட்டான சூழலிலே நாங்கள் இதனைப் பொறுத்துக்கொள்ளுவோம் எனத் தெரிவித்ததையும் ஏற்றுக்கொண்டேன்.

அவருடைய செயற்பாட்டிலே குற்றத்தைக் கண்டுபிடித்தவன் நான். இப்பவும் அதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a comment