ரியல் எஸ்டேட் தரகர் நடுரோட்டில் கொலை – கண்காணிப்பு கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள்

219 0

சென்னை ஐஸ்-அவுசில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஸ்-அவுசில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் தகராறில், காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை ஐஸ்அவுஸ், ஜாகீர் உசேன் கான் தெருவைச் சேர்ந்தவர் ஹனீப்(வயது 40). கார் டிரைவரான இவர், ரியல் எஸ்டேட் தரகர் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று பிற்பகல் 2 மணி அளவில், ஹனீப் ஐஸ்-அவுஸ் பெசன்ட் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த 4 மர்ம நபர்கள், ஹனீப்பை வழிமறித்தனர். அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். அப்போது மர்ம நபர்களில் ஒருவர், திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹனீபை சரமாரியாக குத்தினார்.

நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில், ஹனீப் உயிருக்கு போராடினார். அவரை கத்தியால் குத்திய நபரும், மற்ற 3 நபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

உயிருக்கு போராடிய ஹனீபை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் சங்கர் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து சென்று விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட ஹனீபின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில், ஹனீபை கொலை செய்த கொலையாளிகள் யார் என்பது பற்றி உடனடியாக துப்பு கிடைத்தது. ஹனீப், பெண் ஒருவருக்கு பைனான்சியர் ஒருவரிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடனை அந்த பெண் திருப்பிக்கொடுக்கவில்லை. கடனை திருப்பிக்கேட்டு, குறிப்பிட்ட பெண்ணை கடுமையாக ஹனீப் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட அந்த பெண், தனது காதலனையும், அவரது கூட்டாளிகளையும் ஏவி விட்டு, ஹனீபை தீர்த்துக்கட்டியதாக தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் தேடி வருகிறார்கள். பழைய குற்றவாளி சித்திக் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும், அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஹனீப் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்படும் காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த கொலை காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானது. தனியார் தொலைக்காட்சிகளிலும் அந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஜஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.