மதுரையில் சவால்களை சமாளித்து ஓராண்டை நிறைவு செய்த மாநகாரட்சி ஆணையர் சித்ரா!

13 0

 3 ஆண்டுகளில் 5 ஆணையர்கள் மாற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா, நேற்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் தலையீடு, மேயர் மாற்றம், சொத்துவரி முறைகேடு என பல சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025 வரை, 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேயர் இந்திராணி பொறுப் பேற்கும் முன்னர், கார்த்திகேயன் ஆணையராக இருந்தார். அவர் 2021-ம் ஆண்டு, ஜூன் 14-ல் பொறுப்பேற்று 2022 மே 31-ல் மாற்றப்பட்டார். சிம்ரன்ஜீத் சிங் காலோன், 2022-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2023 ஜூன் 6-வரை பணியாற்றினார்.

பின்னர் தற்போது மதுரை ஆட்சியராக இருக்கும் பிரவீன்குமார், ஆணையராக 2023-ம் ஆண்டு ஜூன் 9-ல் பொறுப்பேற்று, 4 மாதங்களில் அக்.18-ல் மாற்றப்பட்டார். மதுபாலன், 2023-ம் ஆண்டு டிசம்பர் 19-ல் பொறுப்பேற்ற நிலையில், 2024 பிப்.11-ல் மாற்றப்பட்டார்.

தினேஷ்குமார், 2024 பிப். 12-ல் பொறுப்பேற்று, ஓர் ஆண்டை நிறைவு செய்வதற்குள், 2025 பிப். 2-ம் தேதி கிருஷ்ணகிரி ஆட்சியராக பதவி உயர்வில் சென்றார். உள்ளூர் அமைச்சர்கள், மேயர், கவுன்சிலர்கள் அரசியல் நெருக்கடியையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியாமலேயே ஆணையராக வந்தவர்கள், அவர்களே இடமாறுதல் கேட்டுச் சென்றனர்.

சிலர் ஆளுங்கட்சியினரால் கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் மதுரை மாநகராட்சிக்கு ஆணையராக வருவதற்கே ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் தயக்கம் இருந்தது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக சித்ரா, கடந்த 2025-ம் ஆண்டு பிப்.3-ம் தேதி பொறுப்பேற்றார்.

சில மாதங்களில் மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரம் சூடுபிடித்து இதுவரை ஆணையர்களாக இருந்தவர்களுக்கு இல்லாத அரசியல் நெருக்கடி சித்ராவுக்கு ஏற்பட்டது. ஆனால், எந்த அரசியல் நெருக்கடிக்கும், சிபாரிசுகளுக்கும் இடம் கொடுக்காமல் இந்த முறைகேடு விவகாரத்தை மிக நேர்மையாக விசாரித்து, உள்ளூர் அமைச்சர்கள் முதல் தமிழக அரசின் பாராட்டை பெற்றார்.

உதவி ஆணையர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் 28 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்ததோடு, சொத்துவரி முறைகேடுக்கு அடித்தளமான கட்டிட அனுமதி, வரிவசூலில் துணிச்சலாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாண்டு தீர்வு கண்டார்.

சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் திமுக தலைமை மேயர் இந்திராணி முதல் ஐந்து மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிகளை பறித்தது. அதன்பின்னர் கடந்த 4 மாதங்களாக மேயர், மண்டலத் தலைவர்கள் இல்லாமலேயே மாநகராட்சி நிர்வாகத்தை ஆணையர் சிறப்பாக மேற்கொண்டு வருவதை அறிந்து, இவரது தலைமையிலேயே மாநகராட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேயர் இல்லாததால், ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் அரசியல் அழுத்தங்களை சமாளித்து, ஆணையர் சித்ரா, மாநகராட்சி பள்ளிகள், வருவாய், நிர்வாகம், சுகாதாரம், நகரமைப்பு துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.