ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கடந்த 7 வருடங்களாகக் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, போட்டிப் பரீட்சையின்றி நேரடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு முறையான பொறிமுறையொன்று அடுத்த 6 மாத காலப்பகுதிக்குள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது அளித்த உறுதிமொழியினையடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (3) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்த போராட்டத்தின் போது, 6 பேரின் உடல்நிலை மிக மோசமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை குறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதைய ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வேறு நிறுவனங்களுக்கு மாற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகவும், இது எமது போராட்டத்துக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் . கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் சேவைக்குள் பிரவேசிப்பதற்கான முறையான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் இந்த விடயங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டதுடன், அவற்றைச் செயற்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. புதன்கிழமை (4) கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தைக் கருத்திற் கொண்டும், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மதிப்பளித்தும் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாவிடின், மீண்டும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீண்டும் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கத் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றார்.

