வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஐ.ஜே. அபேரத்ன நியமனம்

6 0

தற்போது வெற்றிடமாக இருந்த திறைசேரியின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஐ.ஜே. அபேரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த பதவிக்காக தகைமையுடைய அதிகாரியை அடையாளங் காணும் நோக்கில், இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர தகைமை கொண்ட அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில், அதியுயர் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட திருமதி ஐ.ஜே. அபேரத்னவை குறித்த பதவிக்கு நியமிப்பது பொருத்தமானது என நேர்முகத் தேர்வுக் குழு விதந்துரைத்துள்ளது.

இந்த விதந்துரையின் அடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயல்படும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, திறைசேரியின் முக்கிய திணைக்களங்களில் ஒன்றான வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக திருமதி ஐ.ஜே. அபேரத்ன தனது கடமைகளை உடனடியாக பொறுப்பேற்க உள்ளார்.