மலையக மக்களின் விடுதலையின் பேராயுதம் கல்வியே ஆகும் எனவும், விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல எனவும் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (02) தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய மாணவர்களுக்கான NVQ – Level 04 சான்றிதழ் வழங்கல் மற்றும் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த 200 வருடங்களாக மலையக மக்கள் வெறும் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறி, எமது சமூகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றது. 2026ஆம் ஆண்டு இந்தத் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பணிகளுக்காக 55 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
இங்குப் பயிற்சி பெறும் ஒரு மாணவனுக்காக அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயைச் செலவு செய்கிறது. உலகில் சோம்பேறிகளுக்கு விடுதலையோ அல்லது அவர்கள் மீது விமர்சனமோ கிடையாது. மலையக மக்களுக்கு உழைப்பு தொடர்பாக எவரும் பாடம் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. உழைப்பைப் பிரிக்க முடியாத ஒரு வரலாற்றைக் கொண்டவர்கள் நாங்கள்.
காலநிலை மாற்றத்தைக் கூடச் சாதாரண மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஆனால், மலையகப் பெண்கள் வாழ்நாள் முழுவதும் உழைப்பிற்காக வெயிலிலும் மழையிலும் கடுமையாக உழைப்பவர்கள். ஆகவே, அவர்கள்தான் உண்மையான ‘சிங்கப் பெண்கள்’.
2023ஆம் ஆண்டு (2024 தேர்தல் பிரசாரத்தின் போது) எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் மலையக மக்களுக்கான பிரகடனத்தை ஹட்டனில் வெளியிட்டார். அதில் கூறியது ஒன்றே ஒன்றுதான்; மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம். நிச்சயமாக எதிர்வரும் 10ஆம் திகதி அந்தச் சம்பளம் எமது மக்களின் கைகளுக்குக் கிடைக்கும். இதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
எமது மக்களை இதுவரை காலமும் ஏமாற்றியவர்கள், இவை எதுவும் நடக்காது என விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எமது மலையக மக்களுக்குக் காணி உரிமையினையும் பெற்றுக்கொடுக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
கடந்த காலங்களில் அரச நிர்வாகங்களில் அரசியல் தலையீடுகள் பரவலாகக் காணப்பட்டன. இன்று அரச நிறுவனங்களில் உள்ளவர்கள் முறையாகத் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல எமது அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது. கடந்த கால அரசியல் தலையீடுகளால் திறமையானவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டிருந்தன.
அதேவேளை, அரசாங்கம் தற்போது போதைப்பொருளுக்கு எதிரான பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. போதையினால் பாதிக்கப்படுகின்ற சமூகமாக மலையகச் சமூகம் கடந்த காலங்களில் காணப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் சாதனை படைத்ததாகக் கூறியவர்கள், மதுபானசாலைகளுக்கே அனுமதி வழங்கினார்கள். இந்தப் போதைப்பொருள் அரக்கனை ஒழிப்பதற்கு ஒரு தரப்பால் மாத்திரம் முடியாது, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

