நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்துக்கான நிலஎடுப்பு பணிகளை உடனே மேற்கொள்க: ராமதாஸ்

17 0

 நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கான நிலஎடுப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நூற்றாண்டு கால கனவுத் திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தில் சாத்தனூர் அணையின் உபரி நீரை 23 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் நந்தன் கால்வாயுடன் இணைக்க, நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் அதற்கான செலவிட்டுத்தொகை ரூ.42,69,51,310-க்கு கடந்த 29-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகளை நிரப்பி, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தந்தது தான் நந்தன் காலவாய் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் ஆதாரமாகத் திகழ்ந்த கீரனூர் அணை 200 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து விட்ட நிலையில், காலப்போக்கில் கால்வாய்களும் சீரழிந்து விட்டன. அணையையும், கால்வாய்களையும் சீரமைத்து நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று 1930-களின் இறுதியில் ராஜாஜி ஆட்சிக் காலத்திலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டாலும் கூட, கடந்த 96 ஆண்டுகளாக அவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படவில்லை.

மண்ணின் மைந்தரும், எனது மதிப்பிற்குரியவருமான ஏ.ஜி என்றழைக்கப்படும் ஏ.கோவிந்தசாமி தமிழக அமைச்சராக இருந்த போது, நந்தன் கால்வாய்த் திட்டத்தின் தேவையை உணர்ந்து அதற்கான பணிகளை மேற்கொண்டார். அண்ணா காலத்தில் தொடங்கி கருணாநிதி காலத்திலும் தொடர்ந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே, நல்வாய்ப்புக்கேடாக ஏ.ஜி. காலமானதால், கால்வாய் பணிகள் முழுமை அடையவில்லை. அதன்பின்னர் எம்.ஜி.ஆர் காலத்தில் ஓரளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை முழுமை பெறவில்லை. காலப்போக்கில் கால்வாய்கள் சீரழிந்து, இருந்த தடம் தெரியாமல் மறைந்து விட்டன.

நந்தன் கால்வாயை சீரமைப்பதற்கான கோரிக்கைகள் கடந்த 35 ஆண்டுகளாக மீண்டும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது, அதற்காக முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் நந்தன் கால்வாய் சீரமைப்பு மற்றும் தென் பெண்ணையாறு – துரிஞ்சலாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட 20 நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். சாத்தனூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தென்பெண்ணையாற்று வழியாக கடலில் கலக்கும் தண்ணீரை கால்வாய் அமைத்து அந்நீரை திருப்பி விட்டால் சுமார் 10 டி.எம்.சி தண்ணீரால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.