நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அச்சமில்லை – அனில் ஜாசிங்க விளக்கம்

13 0

இந்திய மேற்கு வங்கத்தில் இரு தாதியர்களுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடைய 196 பேருக்குத் தொற்று இல்லையென உறுதியானது. சர்வதேச நாடுகளுக்கு  பரவும் அபாயம் குறைவாக உள்ளதால் பயணக்கட்டுப்பாடுகள் தேவையில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

எனினும், உயிரிழப்பு வீதம் 40-70 சதவீதமாக  உள்ளதால் தாய்லாந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்திய பயணிகளுக்கு விமான நிலையங்களில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நிபா வைரஸ் தொற்று நாட்டிற்குள் ஊடுருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படுவதுடன், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து நாட்டின் நோய் பரவல் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நிபா வைரஸ் தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைச்சால் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச எல்லைகளுக்கிடையிலான பயணங்களுக்கு  தடையை விதிக்குமாறு பரிந்துரைக்கவில்லை. அத்தோடு தற்போதைய காலப்பகுதியில் இந்த வைரஸ் தொற்று நாட்டிற்குள் ஊடுருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன.

மேற்படி வைரஸ் விலங்குகளிடமே பெரும்பாலும் காணப்படுவதுடன், குறிப்பாகப் பழங்களை உணவாகக் கொள்ளும் வௌவால்களின் மூலமும் பரவுகிறது. கிருமித் தொற்றுக்குள்ளாகியுள்ள விலங்குகளுடன் பழகுதல், வளர்த்தல் அல்லது பிற பொருட்களை நெருக்கமாக வைத்திருத்தல் நோய்க்கிருமி மனித உடலை அடைகிறது. அத்தோடு  மனிதரிடமிருந்து மனிதருக்கு வைரஸ் பரவுவது, தொற்றாளரிடம் நீண்டகாலமாக நெருங்கிப் பழகும் குடும்பத்தினர், அயலவர்கள் போன்றோருக்காகும்.

அதேபோல் இந்த வைரஸ் இன்புளுவென்சா போன்று காற்றின் ஊடாகப் பரவும் வைரஸ் இனமல்ல. சாதாரண அல்லது தற்செயலான தொடுகை  மூலம் இது  பரவாது. துரிதமாகநோயைக் கண்டறிவதற்கு  பலமான நோய் ஆய்வகக் கட்டமைப்பும், நோயாளர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும் திறனும் சுகாதார அமைச்சுக்கு உள்ளது.

அத்தோடு நோயாளரை அடையாளம் காணும் எம்.ஆர்.ஐ. பரிசோதனைகளை நடத்துவதற்கான வசதிகளும் அரச ஆய்வகங்களில் உள்ளன.உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து நாட்டின் நோய் பரவல் தொடர்பில் கண்காணித்து வருகிறது.

ஆகையால் பொதுமக்கள் இது தொடர்பில் அச் சமடையத் தேவையில்லை. அவ்வாறு ஏதேனும் சந்தேகத்திற்குரிய நோய் நிலைமை அடையாளம் காணப்படும் பட்சத்தில் சுகாதார அமைச்சு அது தொடர்பில் உடனடியாக அறிவிக்கும்  என்றார்.