தமிழகத்தில் நாளை முதல் பிப்.6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (பிப்.1) ஓரிரு இடங்களிலும், 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களிலும், 4-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 5-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 6-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டமும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
2, 3, 4 தேதிகளில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

