அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான படைக்குவிப்பும், போர்ப் பதற்றமும். பாரசீக வளைகுடாவின் வான்பரப்பில் இன்று ஒரு விசித்திரமான மௌனம் நிலவுகிறது. மேலே அமெரிக்காவின் அதிநவீன ட்ரோன்கள் வட்டமிடுகின்றன, கீழே ஈரானின் ட்ரோன்கள் அவற்றுக்குச் சவாலாகப் பறக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவே, உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ராணுவச் சொத்தான அமெரிக்காவின் ‘விமானம் தாங்கிக் கப்பல்’ (USS Abraham Lincoln) மிதந்து கொண்டிருக்கிறது.
இதுவரை எதுவும் வெடிக்கவில்லை, ஆனால் அந்த அமைதிதான் வரப்போகும் பெரும் புயலுக்கான எச்சரிக்கை போலவே தோன்றுகிறது. முன்பெல்லாம் போர்கள் என்பது அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகளிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் தொடங்கும்.
ஆனால், 2026-ன் இந்தப் போர் இயந்திரங்களின் பார்வையில் தொடங்குகிறது. இரு தரப்பும் இமைக்க மறுக்கும் இந்தத் தருணத்தில், ஒரு சிறிய தவறான கட்டளை கூட மீள முடியாத பேரழிவிற்கு வழிவகுக்கும்.இந்த மோதலின் மிக முக்கியமான அம்சம் ஆயுதங்களின் வலிமை அல்ல, அவற்றின் விலை.அமெரிக்காவின் பக்கம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் ஒவ்வொன்றும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகள்.
ஈரானின் பக்கம் வெறும் சில ஆயிரம் டாலர்களில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ட்ரோன்கள்.
இங்கேதான் ஒரு பெரிய தந்திரம் ஒளிந்திருக்கிறது. சில ஆயிரம் டாலர் மதிப்புள்ள ஈரானிய ட்ரோனைத் தடுக்க, அமெரிக்கா ஒரு மில்லியன் டாலர் ஏவுகணையைப் பயன்படுத்தினால், அந்தத் தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும், பொருளாதார ரீதியாக அது ஒரு தோல்வியே. ஒவ்வொரு தற்காப்பு நடவடிக்கையும் அமெரிக்காவை மெல்ல மெல்ல திவாலாக்கும் Economic Trap இது.முன்பு ‘காலம்’ அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இன்று, ஈரான் நிதானமாக இருக்கிறது. ஒவ்வொரு நிமிடம் தாமதமாகும் போதும், அமெரிக்கத் தளபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. ஒரு விமானம் தாங்கிக் கப்பலை சும்மா நிறுத்தி வைத்திருப்பது கூட அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாகவும் ஒரு பெரிய சுமையாகும்.
இன்றைய போர்முறை என்பது பெரிய கப்பல்கள் அல்லது பெரிய குண்டுகளைப் பற்றியது அல்ல. இது “Swarm Warfare” எனப்படும் கூட்டமாகத் தாக்கும் முறை. ஈரானுக்கு எல்லா ட்ரோன்களும் இலக்கைத் தாக்க வேண்டிய அவசியம் இல்லை , ஒரு சில ட்ரோன்கள் குழப்பத்தை உருவாக்கினால் போதும். அந்த குழப்பம் உலக சந்தைகளை உலுக்கும்.பாரசீக வளைகுடாவில் நடப்பது ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல.
எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு சில நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டால் கூட, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடும். சந்தைகள் உண்மைகளுக்காகக் காத்திருப்பதில்லை, அவை பயத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்றும்.
வாஷிங்டனில் அழுத்தம் உச்சத்தில் உள்ளது. ஏனெனில் நடவடிக்கை எடுத்தால் அது ஒரு முழு அளவிலான போராக மாறி, அமெரிக்காவை ஒரு நீண்ட காலச் சிக்கலில் தள்ளும்.நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்காவின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் செல்வாக்கு குறையும்.இந்த முழு நாடகத்தையும் பின்னால் இருந்து இயக்குவது இஸ்ரேல் என்பது பலகாலம் சர்வதேச அரசியலை தொடர்பவர்களுக்கு புரியும்.
2026-ல் இஸ்ரேலில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நெதன்யாகு தனது அதிகாரத்தைத் தக்கவைக்க ஈரானை ஒரு “இருப்புக்கு அச்சுறுத்தலாக” (Existential Threat) சித்தரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு என்ன இலாபம் என்றால்
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் சிதைக்க அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்துவது.காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் மீதான சர்வதேச விமர்சனங்களை திசைதிருப்ப இந்தப் பதற்றம் உதவுகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரும் அதே வேளையில், மத்திய கிழக்கிலேயே அணு ஆயுதங்களை ரகசியமாக வைத்திருக்கும் ஒரே நாடான இஸ்ரேல் எந்த ஆய்வுகளுக்கும் உடன்படுவதில்லை.ஈரான் அமெரிக்காவை அழிக்க முயலவில்லை மாறாக, அமெரிக்க அதிகாரத்தின் எல்லைகளை (Limits) உலகுக்குக் காட்ட முயல்கிறது. பில்லியன் டாலர் மதிப்புள்ள கப்பல்களால் ஒரு சிறிய ட்ரோன் கூட்டத்தைத் தடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டால், அது ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கமாக இருக்கும்.
அனைத்துலக சிந்தனைப்பள்ளி.

