ஜேர்மனியில் வெள்ளையர்கள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை நிலவுவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், இனத்தின் அடிப்படையில், வீடு பார்க்கக்கூட தன்னை அனுமதிக்கவில்லை எனக்கூறி பெண்ணொருவர் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று கவனம் ஈர்த்துள்ளது.
வீடு வாடகைக்கு விடுவதில் பாரபட்சம்
ஜேர்மனியில், வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு வாடகைக்கு வீடு விடப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவது தொடர்பில், German Center for Integration and Migration Research (DeZIM) என்னும் ஆய்வமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வில், இஸ்லாமியர்கள் மற்றும் கருப்பினத்தவர்களுக்கு வீடு கிடைப்பதில் அதிக பிரச்சினை உள்ளது சமீபத்தில் தெரியவந்தது.மேலும், வீடு வாடகைக்கு என்னும் விளம்பரத்தைப் பார்த்து விசாரிக்கும்போதே, வாடகைக்கு வீடு தேடுவோரின் பெயர் ஜேர்மானியர் பெயர் போல் இல்லாவிட்டால், அவர்களில் பலர் வீடு பார்க்க அழைக்கப்படுவதே இல்லை என்றும் கூறப்பட்டது.
கவனம் ஈர்த்துள்ள வழக்கு
இந்நிலையில், இனத்தின் அடிப்படையில், வீடு பார்க்கக்கூட தன்னை அனுமதிக்கவில்லை எனக்கூறி பெண்ணொருவர் தொடர்ந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது ஜேர்மன் உச்சநீதிமன்றம்.
ஹுமைரா வசீம் (30) என்னும் இஸ்லாமியப் பெண், ஜேர்மனியில் வீடு வாடகைக்குப் பார்ப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு ஒன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பின்னணி கொண்டவரான அவர் பலமுறை அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும், அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் மற்றும் கருப்பினத்தவர்களுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை உள்ளது என்பதை நன்கறிந்திருந்த ஹுமைரா, பிறகு ஜேர்மன் பெயர்களில் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளார்.
அப்போது அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்களுடன், இனத்தின் அடிப்படையில் தனக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, தனக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தார் ஹுமைரா.
அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஹுமைராவுக்கு 3,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வழக்குக்கான செலவை அளிக்கவேண்டும் என்றும் Darmstadt நகர நீதிமன்றம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரியல் எஸ்டேட் உரிமையாளர் மேல்முறையீடு செய்ய, வழக்கு உச்சநீதிமன்றத்தை அடைந்துள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹுமைராவுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது என்று கூறியுள்ளதுடன், Darmstadt நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ரியல் எஸ்டேட் நிறுவனம் ஹுமைராவுக்கு 3,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வழக்குக்கான செலவை அளிக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள்.

