ஒரு பெரிய நோக்கத்திற்காக ஒன்றுபடுவதன் சக்தியை இலங்கையர்கள் நன்கு அறிவர். “டெப் போர் சேன்ச்” இன் ஊடாக ஒவ்வொரு இலங்கையருக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கையர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், “கலர்ஸ் ஒப் கரேஜ்” அறக்கட்டளையின் இணை நிறுவனருமான மஹேல ஜயவர்தன குறிப்பிட்டார்.
மாஸ்டர் அட்டை நிறுவனமானது “கலர்ஸ் ஒப் கரேஜ்” அறக்கட்டளையுடன் இணைந்து, “டெப் போர் சேன்ச்” எனும் பெயரில் மாஸ்டர் அட்டை மூலம் செயல்படுத்தப்படும் தொடர்பற்ற அட்டை மற்றும் இணைய வர்த்தக பரிவர்த்தனைகள் வழியாக, ஒவ்வொரு டிஜிட்டல் கொடுப்பனவையும், கராபிட்டிய ட்ரையல் புற்றுநோய் வைத்தியசாலையின் கட்டுமானத்திற்காக நேரடியாக பங்களிக்கும் வகையில் வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ தொடக்க வைபவமானது வெள்ளிக்கிழமை (30) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாஸ்டர் அட்டையின் ஒவ்வொரு பயன்பாடும் நீடித்த தாக்கத்துடன் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான படியாகும். மாஸ்டர் கார்ட் உடனான இந்த முயற்சியை ஆதரிப்பதில்லை நான் மிகவும் பெருமையடைகின்றேன்.
ஏனெனில் ஒவ்வொரு சிறிய செயலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் உயர்மட்ட தரத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையையும் உருவாக்க பங்களிக்கின்றது.
அனைத்து மாஸ்டர் அட்டை வாடிக்கையாளர்களையும் மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் அட்டைகளை பயன்படுத்துமாறு நான் ஊக்குவிக்கின்றேன் என்றார்.

