நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளதுடன் இதுவரை 800 மேற்பட்ட சாரதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியு.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு இதனை குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் பாணந்துறை பகுதியில் தேசிய வைத்திய நிறுவனம், மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனையின் போது, 84 பஸ் சாரதிகளிடம் சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது மூன்று சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சோதனைகள் மூலம் 14 நாட்களுக்குள் கஞ்சா, ஹெரோயின், ஐஸ் மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியவர்களை கண்டறிய முடியும்.
இந்தச் சந்திப்பின் போது, “பரிசோதனையில் சிக்கிய சாரதி ஒருவர் தான் எந்தப் போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என ஊடகங்களிடம் பொலிஸார் மீது குற்றம் சுமத்துகிறாரே?” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், 84 பேரைச் பரிசோதித்ததில் மூவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஒரு சாரதி தான் குற்றமற்றவர் எனக் கூறுவது வெறும் ஊடகக் காட்சிக்காக மட்டுமே. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் விசேட நிபுணர்கள் முன்னிலையிலேயே இந்த பரிசோதனைகள் இரண்டு முறை நடத்தப்படுகின்றன. இதில் சந்தேகம் இருப்பின் குறித்த சாரதி அதனை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம். பொலிஸார் முறையான சட்ட நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான சோதனைகளில் 800 மேற்பட்ட சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் சாரதிகள் என்பது கவலைக்குரிய விடயமாகும். வாகன உரிமையாளர்கள் இவ்வாறான போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளிடம் வாகனங்களை வழங்கக் கூடாது .
மேலும், பயணிகளும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதிக வேகம், உரத்த சத்தம் கொண்ட இசை அல்லது சாரதியின் நடத்தையில் சந்தேகம் இருப்பின் 1955 எனும் இலக்கத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்க முடியும். அத்துடன் கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைச்சுடன் இணைந்து புதிய திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்றார்.

