இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டமாக, மேலும் 250 அரச நிறுவனங்களில் உள்ளக விவகார பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்தில் இருந்தாலும், 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதுடன், இது ஏனைய துறைகளில் தரவரிசையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
கடந்த மக்கள் எழுச்சியின் முக்கிய கோசம் ஊழல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து, அதன் பாதகமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வரும் நேரத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதாகவும், மக்கள் எழுச்சி ஒரு முறையான செயல்முறையின் இறுதி விளைவாகும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
மக்களின் எழுச்சியை அற்பமானதாக கருத முடியாது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அரச ஊழியர்களாக, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காகத்தான் நாம் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவியுள்ளோம்.
அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது அவர்களின் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரச துறையில் ஊழல் கலாசாரத்தை மாற்ற முடியும். அரச சேவைக்குள் நேர்மையான கலாசாரத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையாகவும், அரச அதிகாரிகளின் நேர்மையை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு தளமாகவும் உள்ளக விவகாரப் பிரிவுகளைக் கருதலாம்” என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தரிந்து தனஞ்சய வீரசிங்க ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.

