நிவாரணம் வழங்கல் பொருளாதாரத்துக்கு தாக்கம் செலுத்தாது

6 0

தித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரிடர்களினால் பொருளாதாரத்துக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படாது. நெருக்கடி நிலைமையை குறுகிய காலத்தில் சீரமைக்க முடியும்.அதற்கான கையிருப்பு மற்றும் பொருளாதார ஸ்திரநிலைமை வலுவானதாகவே காணப்படுகிறது. நிவாரணம் மற்றும் நிவாரண நிதி வழங்கலுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டின் முதலாவது நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பில்  புதன்கிழமை (28)  இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மற்றும் பூகோள நிச்சயமற்றத்தன்மைகள் ஆகியவற்றின் போக்கினை அடிப்படையாகக் கொண்டு ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதத்தால் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடானது பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கியதாக அமைய செல்வாக்குச் செலுத்தும்.

வர்த்தகப் பற்றாக்குறையின் போக்குக்கு மத்தியில் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது  2025 ஆம் ஆண்டு கணிசமான அளவில் மிகையொன்றைப் பதிவு செய்யுமென மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாட்டுப் பணவனுப்பல்கள்  ஆரோக்கியமானதாக காணப்பட்டது.

2026 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரியளவிலான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு மத்தியில், மொத்த அலுவல்சார் ஒதுக்கல்கள், 2025 ஆம் ஆண்டு இறுதியளவில் 6.8 பில்லியனாக கட்டியெழுப்பப்பட்டன.

தித்வா தாக்கத்தின் பின்னரான பொருளாதார நிலைமை

2025 ஆம் ஆண்டு முதல் 09 மாதக் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரமானது 5.0 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடர்களினால் பொருளாதார வளர்ச்சி மிதமான தன்மையில் காணப்பட்டாலும் அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தவில்லை.

தித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரிடர்களினால் பொருளாதாரத்துக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படாது. நெருக்கடி நிலைமையை குறுகிய காலத்தில் சீரமைக்க முடியும்.அதற்கான கையிருப்பு மற்றும் பொருளாதார ஸ்திரநிலைமை வலுவானதாகவே காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியின் போது திறைசேரியில் ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை. அதனால் தான் சமூக கட்டமைப்பில் சேவை விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவ்வாறான நிலைமை தற்போது கிடையாது. சவால்களுக்கு முகங்கொடுக்கும் பொருளாதர நிலைமை ஸ்திரமாகவுள்ளது.

 பெருந்தோட்ட முதலீடு முறைகேடு

அண்மைகாலமாக பெருந்தோட்ட துறையில் முதலீடு செய்வது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறுப்பட்ட  விளம்பரங்கள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இலங்கையில் பெருந்தோட்டத்துறை முதலீடு தொடர்பில் எவ்விதமான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல்கள் ஏதும் கிடையாது.

பெருந்தோட்ட துறையில் முதலீடு என்ற போர்வையில் சட்டவிரோத பிரமிட் நடவடிக்கைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.  இவ்வாறான முறைகேடுகள் குறித்து 18 பேரிடமும், ஒருசில நிறுவனங்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத்துறை முதலீட்டு அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

2000 ரூபா நாணயத்தாள் புழக்கம்

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு 2000 ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டது. இந்த 2000 ரூபாவுக்கு ஒப்பானதாக போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக ஒருசில செய்திகள் வெளியாகியுள்ளதையும் மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

நாணய விநியோகத்துக்கு புதிதாக ஒரு நாணயத்தாளை அறிமுகப்படுத்தும் போது இவ்வாறான சிக்கல்கள் தோற்றம் பெறுவது வழமையானதே. 2000 ரூபா நாணயத் தாளில் பல இரகசிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.   2000 ரூபா போலி நாணய புழக்கம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்றார்.