“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப்பேசுவது ஜனநாயகத்தில் நடப்பதுதான்” – கூட்டணி பற்றி வைகோ விளக்கம்

22 0

“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப் பேசுவது ஜனநாயகத்தில் நடப்பது தான்” என கூட்டணி குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அப்போது, அவர் தமிழ்நாடு ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எஃகு கோட்டை போன்று உறுதியாகவும், பலமாகவும் உள்ளது.

திமுக மாநாடுகளை நடத்தி தேர்தல் பந்தயத்தில் எங்கள் அணி மிகுந்த முன்னோட்டத்தோடு அனைவரையும் முந்திக்கொண்டு நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அணி மிகப் பெரும்பான்மையான வெற்றியை பெறும். தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி 2026- ம் ஆண்டுக்கு பிறகும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை டிடிவி தினகரன் விமர்ச்சித்த நிலையில் கூட்டணியில் சேர்ந்துள்ளார். இருப்பினும், கட்சிகள் அணி மாறுவது, மாற்றி பேசுவது என்பது ஜனநாயகத்தில் நடப்பதுதான். இது தமிழகம் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் நடக்கின்றது. அதை நான் விமர்சிப்பதில்லை. ஏற்கெனவே திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வேறு கட்சிகள் வருவார்களா என்ற செய்தி எனக்கு தெரியவில்லை.

திமுக – காங்கிரஸ் இடையேயான கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் கூட்டணி தொடர்பாகவும் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து பேச இருப்பதாக செய்தி வருகின்றது. ஒருவருக்கொருவர் இடையில் மனக்கசப்பு இருந்தாலும் தலைமை அளவில் பேசி முடிக்கும்போது , அதெல்லாம் காணாமல் போய்விடும்.

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக ஆக்குவது குறித்து திமுக அமைச்சர்கள் பரிந்துரைத்து இருப்பது, தமிழக மையப்பகுதி என்பதால் கருத்துக்கள் சொல்லி இருக்கலாம். அது கொள்கையின் முடிவாக அறிவித்திருக்கின்றனர். என்றாலும் எந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கடந்த 4, 5 ஆண்டுகளாக நமக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், பிரதமர் நரேந்திர மோடி அரசு, தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சகம் செய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்குகிறது. சென்னைக்கு வந்த பிரதமர் மோடி தன் இஷ்டத்துக்கு பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளார். நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற அவரது முயற்சி எடுபடாது.

திமுக அரசு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை வகுத்து 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு அனைவரையும் முந்திச் செல்கிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாதது என்ன காரணம். படத்தில் என்ன செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. எதற்காக தள்ளிப் போகிறது என்ற முழு விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு திரைப்படத்தை வெளியில் விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.