நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் புதன்கிழமை (28) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை 48 மணிநேரத்திற்குத் தற்காலிகமாக ஒத்திவைக்க அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியுடன் செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது, பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு காரணமாக இருந்த மாளிகாவத்தை வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றும் நபருக்கு எதிரான தீர்மானம் குறித்து 48 மணிநேரத்திற்குள் அறிவிக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் உறுதியளித்தார். அத்துடன், தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பணிப் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பேற்பதாகச் சுகாதார பிரதி அமைச்சர் எழுத்துமூல இணக்கப்பாட்டையும் வழங்கியிருந்தார்.
தற்போது சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் ஏனைய தொழிற்சங்கப் போராட்டங்கள் காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டுள்ளனர். ஆகையால் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்கச் கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

