அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சென்னையின் பல்வேறு கல்லூரிகளை சேரந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் புதுகல்லூரி, மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் கல்லூரி வளாகங்களுக்கு உள்ளேயே போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் இன்னும் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த ஆணையின்படி ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை, ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இதுதவிர ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.மறுபுறம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தரப்படாத சம்பளத்தை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தரவேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்

