வெற்றிகரமான இந்தியா உலகை அதிக நிலைத்தன்மை கொண்டதாகவும் செழிப்பானதாகவும் மாற்றுகிறது என ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆண்டுதோறும் ஜன.26ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் மத்திய அரசின் அழைப்பை ஏற்று நாட்டின் 77-வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளனர். அவர்கள் இருவரும் டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றனர்.
இந்தியாவுக்கும் 27 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. எனினும் 2013-ல் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த ஒப்பந்தம் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன், இந்தியா உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் உர்சுலா வான் டெர்லேயன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் உர்சுலா வெளியிட்ட பதிவில், “இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்றது என் வாழ்நாளில் கிடைத்த கவுரவம். வெற்றி நடைபோடும் இந்தியா, உலகை அதிக நிலைத்தன்மை கொண்டதாகவும், வளமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது. இதன் மூலம் நாம் அனைவரும் பயனடைவோம்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா வருவதற்கு முன்பு வான் டெர் லேயன் கூறும்போது, “இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளன. இந்த ஒப்பந்தம் 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

