2026 – தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ், தித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 20,000 வீடுகள்

9 0

வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கமைய 2026 – தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவ்வாண்டுக்குள் 16025 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேலும் 20 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தோட்டப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான 2500 வீடமைப்பு திட்டம் என்பனவும் இதில் உள்ளடங்குவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

‘2026 – தேசிய வீடமைப்பு திட்டம்’ தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு திங்கட்கிழமை (26) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர் சுசில் ரணசிங்க,

வடக்கு, கிழக்கில் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான வீட்டுத்திட்டம்

2026ஆம் ஆண்டுக்கான வரவ – செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய 5 அமைச்சுக்கள் இணைந்து 9 மாகாணசபைகள் ஊடாக இந்த தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இந்த திட்டத்தில் பிரதான பங்கினை வகிக்கிறது. அதற்கமைய எமது அமைச்சின் கீழ் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதற்காக 500 கோடி ரூபா (5000 மில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமையவே கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இந்த வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (28) காலியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 000 வீடுகள்

2026இல் அரசாங்கத்தால் இரு வேறு வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள இந்த தேசிய வீடமைப்பு திட்டமாகும். இரண்டாவது தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டமாகும். தித்வா புயல் ஏற்பட முன்னரே திட்டமிடப்பட்டிருந்த வீடமைப்பு வேலைத்திட்டங்களே 2026 தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளுக்கு வீட்டுக்கடன்

இவற்றுக்காக பிரத்தியேகமாக 50 இலட்சம் ரூபா நிதி உதவி திட்டம், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான வேலைத்திட்டம் என்பனவும் வெ வ்வேறாக முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளுக்கான வீடமைப்பிற்கான பிரத்தியேகக் கடன் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை 2026 தேசிய வேலைத்திட்டத்துக்கு அப்பால் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களாகும்.

பயனாளிகள் தெரிவு

இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகைப்படுத்தல்களின் அடிப்படையில் பயனாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அதற்கமைய சிறுவர் இல்லங்களில் வளர்ந்த 18 வயது பூர்த்தியானோருக்கான வீட்டுத்திட்டம் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று முதியோர் செயலக அலுவலகத்தினால் முதியோருக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் என்பன இதில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை குறைந்த வருமானம் பெறும் அதேவேளை, தமக்கென இடமொன்று காணப்படும் பயனாளர்களும் இதில் உள்வாங்கப்படுவர். குறைந்த வருமானம் பெறுபவர்களில் வாழ்வதற்கு பொறுத்தமற்ற வகையில் வீடுகளை நிர்மாணித்துள்ளவர்களுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறான பயனாளர்களுக்காக 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.