தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான கடவத்த டிப்போவுக்கு சொந்தமான பேருந்தொன்றில் திடீரென தடையாளி செயலிழந்ததால் பிரதான வீதியில் காட்டுப் பகுதியில் பள்ளமான இடத்தில் பேருந்தினை ஒரு மண் மேட்டில் மோதவைத்து பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி சாரதியின் சாதுரியத்தால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனை கடவல வளைவு பகுதியில் இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தை மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் வயது (49) என்ற சாரதியே பேருந்து குறுகிய வளைந்த மலைப்பாதையில் பயணித்த போது பேருந்தில் தடையாளி கோளாறு ஏற்பட்டுள்ளதை உடனடியாக உணர்ந்து அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மண் மேட்டில் மோத வைத்து பேருந்தினை நிறுத்தி பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 80 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
எனினும் பேருந்திற்கு மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டாலும், பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் சாரதி பேருந்தை கட்டுப்படுத்த தவறியிருந்தால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
கினிகத்தேன பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுவத்றகாக போலி தகவல்களை வழங்குதல் மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுவத்றகாக போலி தகவல்களை வழங்குதல் மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருத்தல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

