இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது.
இதற்கமைய 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது, 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது என 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் மற்றும் பொதுச்சேவை எனப் பல்வேறு துறைகளில் ஈடுஇணையற்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
மறைந்த பொலிவுட் நடிகர் தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ், பி.நாராயணன், வி.எஸ்.அச்சுதானந்தன், கலை பிரிவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த என்.ராஜத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, நடிகர் மம்முட்டி, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, பியூஷ் பாண்டே (மறைவு), எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், சதாவதனி ஆர்.கணேஷ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), தொழிலதிபர் உதய் கோட்டக், வி.கே.மல்ஹோத்ரா (மறைவு), வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
நடிகர் மாதவன், மகளிர் கிரிக்கெட் அணி தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தி நடிகர் சதிஷ் ஷா (மறைவு), கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ஹொக்கி வீராங்கனை சவிதா பூனியா, புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேல் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பத்ம விபூஷண், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பத்மஸ்ரீ விருதை 2 பேர் பங்கிட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்

