அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவி, 3 உறவினர்கள் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது

12 0

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மனைவி மீமூ டோக்ரா (43), 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.

ஆனால், உறவினர் வீட்டிலும், மீமு டோக்ரா, விஜய்குமார் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, அவரது உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அப்போது வீட்டில் இருந்த விஜய்குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகளும் அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர். அவர்களில் 12 வயது சிறுவன் 911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீஸார் விரைந்து சென்று விஜய்குமாரை கைது செய்தனர். 3 குழந்தைகளையும் மீட்டனர். 4 சடலங்களை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து அட்லாண்டா போலீஸார் விஜய்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.