‘தேர்தலில் பெண்களுக்கு அதிக சீட்’ – புதுச்சேரியில் காங்கிரஸ் உறுதி

14 0

 காங்கிரஸ் கட்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் பல பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நாம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். இந்த 5 மாநிலங்களுக்கும் தற்போது பிரதமர் வருகை தந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார். பிரதமர் மோடிக்கு பெண் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பில் எந்தவித கவலையும் இல்லை. அவரது ஆட்சியில் பாலியல் தொல்லை, போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சரியான முறையில் விசாரணை நடப்பதில்லை, குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் கிடைப்பதில்லை.

எங்களை பொறுத்தவரையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தான் முதன்மையானது. தற்போது, அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான கல்வி சரியாக கிடைப்பதில்லை. இதனால் இடைநிற்றல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை உயருகிறது.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை முறையாக கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சரியான போக்குவரத்து வதிகள் இங்கு கிடையாது. கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள், பெண்கள் பயணிக்க பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆகவே பெண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை இலவச கல்வி அளிக்க வேண்டும்.

பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூட்டி அல்லது சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், போக்குவரத்துக்கு மானியம் வழங்க வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரையில் பெண்களுக்கு சரியான வேலை வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

டெல்லி, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இல்லை. ஆனால் பெண்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியை நாங்கள் அளித்து வருகின்றோம். புதுச்சேரியில் பெண்களுக்கான முன்னேற்றம், அவர்களுக்கான நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை.

கணவரை இழந்தோர், தனியாக இருக்கும் பெண்களுக்கு சரியான முறையில் உதவித்தொகை கிடைப்பதில்லை. பெண்களின் குறைகளை கேட்டு தீர்வு காணக்கூட உரிய அமைப்புகள் கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் முன்னேற்றம், அவர்களின் திறனை மேம்படுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்போம் என்றார்கள். ஆனால் அதனை இதுவரை அமலுக்கு கொண்டுவரவில்லை.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அமல்படுத்தி குறைந்தது 15 பெண்களுக்காவது போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அப்படி மத்திய அரசு 33 சதவீதத்தை அமல்படுத்தவில்லை என்றாலும் கூட காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பல பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும். இந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவெடுக்கும். ஆனால் வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். காங்கிரஸின் முதல்வர் தான் வருவார். இருப்பினும் தேர்தலுக்கு பிறகே எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி தலைமையின் ஆலோசனைப்படி காங்கிரஸ் முதல்வர் தேர்வு செய்யப்படுவார்” என்று அவர் தெரிவித்தார்.