உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கடும் குளிர் அமெரிக்காவை தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
அமெரிக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் உருவாகும். இதனால், மழை மற்றும் கடும் பனி இணைந்து உறைபனி மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீண்ட நேர மின் தடைகள் ஏற்படலாம், அதிக அளவில் மரங்கள் முறிந்து விழலாம், மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம்.
நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூ மெக்ஸிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும். மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை இது தாக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து, டெக்ஸாஸ் உட்பட பல்வேறு மாகாணங்களில் 2,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிளைட்வேர் ட்ராக்கர் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, மின்கட்டமைப்பு செயலிழந்தது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். எனினும், அப்படி ஒரு நிலை தற்போது வராது என்றும் தற்போது மின் கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடியரசு கட்சியைச் சேர்ந்த டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட், ‘‘மின் கட்டமைப்பு முன்பைவிட வலிமையாக உள்ளது. முன்பைவிட அதிக தயார் நிலையில் உள்ளது. குளிர்கால புயலை எதிர்கொள்ளும் முழு திறனைக் கொண்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
எனினும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகப் பொறியியல் பேராசிரியர் மைக்கேல் வெபர், ‘‘உறைபனி நாடு முழுவதற்கும் ஒரு பெரிய அபாயமாக உருவெடுக்கும். உதாரணமாக பனி, மரங்களின் மீது குவிந்து மரத்தை முறிக்கும். இதனால், மின்சார கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நேரும்போது மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

