பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி தப்பிச் சென்ற லொறியின் சாரதி கைது!

13 0

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா பகுதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி தப்பிச் சென்ற லொறியின் சாரதி இன்று சனிக்கிழமை (24) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை லொறி ஒன்று மோதிவிட்டு தப்பிச் செல்லும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த லொறி ஒன்று பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் வீதியோரம் தூக்கி வீசிவிட்டு காயமடைந்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் லொறியின் அடியில் சிக்கிக் கொண்டதால், லொறியை வீதியிலேயே கைவிட்டுவிட்டு சாரதி அருகில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த காட்சி வீதியில் இருந்த மற்றுமொரு வாகனத்தில் சாரதியால் காணொளியாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான லொறியின் சாரதி வவுனியா பூ ஓயா பாலத்திற்கு அருகில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட லொறியின் சாரதியை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.