இனவாதிகளான ராஜபக்ஷர்கள் கொண்டு வந்த கிவுல்ஓயா திட்டத்தை அரசாங்கம் தொடர தீர்மானித்துள்ளது. இத்திட்டத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் எவரும் இணக்கம் தெரிவிக்க போவதில்லை. கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது. அமைச்சரவையின் தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான இறுதி சந்தர்ப்பம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கமோ அல்லது சமூக கட்டமைப்போ முறுகல் நிலைமைக்கு செல்வதற்கு விரும்புவதில்லை. எமது விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாகவும் காத்திரமாகவும் வழங்கவே எதிர்பார்க்கின்றோம். கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சருக்கு எதிராக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் நாங்கள் அவர் சார்பாகவே கதைத்தோம். நாங்கள் அவ்வப்போது அரசாங்கத்தை விமர்சித்தாலும், அரசாங்கத்தின் பணிகளை தோல்வியடையச் செய்ய முயற்சிக்கவில்லை. அரசாங்கம் பிழைகளை திருத்திக்கொண்டு பயணிக்க வேண்டும்.
கிவுல்ஓயா திட்டத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இணங்கமாட்டார்கள். அரச தரப்பினர் உள்ளிட்டவர்களும் இதற்கு இணங்க மாட்டார்கள். கிவுல்ஓயா திட்டத்தை ராஜபக்ஷக்களே ஆரம்பித்தனர். அவர்கள் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை முன்னெடுத்தவர்கள். யுத்தம் முடிந்த பின்னர் 2013ஆம் ஆண்டு காலத்தில் 6000 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
1984ஆம் ஆண்டு காலத்தில் முல்லைத்தீவுஇ கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கையில் தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இவ்வாறான நிலைமையில் அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் அங்கு சென்ற போது வனபாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடங்களை கையகப்படுத்தியிருந்தனர். இது சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
கிவுல்ஓயா திட்டம் மிகவும் பிரச்சினைக்குரிய விடயம். இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். ஏனைய வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன. இங்கு முழுமையாக சிங்கள மக்களே குடியேற்றப்படுவர். இவ்வாறான வேலைத்திட்டங்கள் ராஜபக்ஷக்களால் கொண்டுவரப்பட்டன.
ராஜபக்ஷர்கள் ஆட்சியை நாங்கள் இனவாதம் என்றோம். ஆனால் உங்களின் ஆட்சியிலும் அவ்வதான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது. அப்படியென்றால் நீங்கள் செய்வதும் அவ்வாறான இனவாத வேலைகளே. ராஜபக்ஷ அரசாங்கம் இந்த திட்டத்துக்கு 7 பில்லியன் ரூபாவே ஒதுக்கியிருந்தது. தற்போதைய அரசாங்கம் இந்த நிதியை அதிகரித்துள்ளீர்கள். இதன்மூலம் அரசாங்கம் எங்களுக்கு சொல்லும் செய்தி என்ன?
யாழ் .தையிட்டி விகாரைக்கென காணி இருக்கும் போது அதனை விடுத்து தனியார் காணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாங்கள் போராட்டத்தை நடத்தும் போது எங்களை இனவாதி என்று ஜனாதிபதி கூறுகின்றார். இதன்மூலம் கூறும் செய்தி என்ன? மீண்டும் எங்களை ஜனாதிபதி இனவாதி என்று கூறினால் இதனை என்னவென்று கூறுவது?
சபையில் உள்ள பிரதமரிடம் கேட்கின்றேன். உங்கள் அரசாங்கம் மற்றைய அரசாங்கங்களை விடவும் வித்தியாசமானது என்றால் முறைமையில் மாற்றம் இருக்க வேண்டும். உங்களிடம் இனவாதம் இல்லையென்றால் மாற்றத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி தொடர்பில் ஆராயுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இதுவே தமிழ் மக்கள் உங்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான இறுதி சந்தர்ப்பமாகும் என்றார்.

