ராகம நகரின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், அங்கு புதிய பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) அமைச்சர் உரையாற்றுகையில்,
ஜா-எல நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ராகம நகரம் ஒரு ‘சுகாதார நகரம்’ (Health City) மற்றும் ‘கல்வி நகரம்’ (Education City) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள முக்கிய வைத்தியசாலைகள் மற்றும் கந்தானை தாதியர் பயிற்சி கல்லூரி இதற்கு வலுசேர்க்கின்றன.
ரயில் நிலையம், பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த போக்குவரத்து மையம் (Multimodal Hub) அமையவுள்ளது.
ராகம நகரின் அபிவிருத்திப் பணிகளுக்குத் தடையாக சுமார் 6 நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. “பழைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்துவதை இவர்கள் தடுத்து வருகின்றனர். இக்கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும்,” என அமைச்சர் உறுதியளித்தார்.
ராகம ஏற்கனவே ரயில் மற்றும் வீதி போக்குவரத்து இணைப்பில் ஒரு முக்கிய சந்திப்பாகத் திகழ்கிறது. புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் தடையின்றி ஒரு போக்குவரத்து சேவையிலிருந்து மற்றொன்றிற்கு மாற முடியும், இது நகரின் நெரிசலைக் குறைப்பதோடு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

