“கீழடியை கண்டு ஆதிக்க சக்தியினருக்கு அச்சம்” – அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து

30 0

கீழடியை கண்டு ஆதிக்க சக்தியினர் பயப்படுகின்றனர் என மதுரையில் நடந்த கல்லூரிக் கருத்தரங்கில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார்.

மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி `இந்தியாவை வரலாற்று சிதைவுகளிலிருந்து மீட்பது’ குறித்த மாநிலக் கருத்தரங்கம் நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் மெர்சி பாக்கியம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பியூலா ஜெய தலைமை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

கருத்தரங்கில் மத்திய தொல் லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது: சங்க காலத் தமிழர்களின் நகர நாகரிகம் தோன்றியதற்கு ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளன. தமிழிலுள்ள தொன்மையான இலக்கியங்களுக்கு ஆதாரங்கள் இல்லை என இதுவரை சொல்லி வந்தனர்.

ஆனால், கீழடியில் இலக்கியங்கள் குறிப்பிடும் சான்றுகளுக்கு தொல்லியல்ரீதியாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆதாரங்கள் கிடைத்தும் தமிழ் இலக்கியத்தின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

இதுவரை கி.மு.3-லிருந்து கி.பி.3-ம் நூற்றாண்டு காலத்தையே சங்க காலம் எனக் குறிப்பிட்டனர். அதைப் பொய்யாக்கும் வகையில் அதற்கும் 500 ஆண்டுகளுக்கு முந்தையது கீழடி நாகரிகம்.

கீழடியில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் மூலம் கி.மு.8-ம் நூற்றாண்டு காலத்திலேயே சங்க காலத் தமிழர்களின் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கி.மு.5-லிருந்து கி.மு.8-ம் நூற்றாண்டு காலத்தில் கீழடி பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. அதற்குப் பின்பு கி.மு. 1-ம் நூற்றாண்டில் அங்குள்ள நகர நாகரிகம் அழியத் தொடங்கியதாக காலக் கணிப்பு உள்ளது.

இத்தகைய தொல்லியல் ஆதாரங்களை ஏற்க மறுக் கின்றனர். அறிவியல்பூர்வமாக தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதால் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்கின்றனர். ஆதிக்க சக்தியினர் கீழடியைக் கண்டு பயப்படுகின்றனர். இவ்வாறு பேசினார்.

முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், சென்னை ராணி மேரி கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியை தேன் மொழி, வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர் பேசினர்.