அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் சாமி அறையில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவன் புதன்கிழமை(21) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் புதன்கிழமை(21) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த 24 வயதுடைய ரவிந்திரன் மிதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

