ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

17 0

சட்டவிரோத ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், வாகனங்கள் உள்ளது போக்குவரத்து நடவடிக்கைகாக மாத்திரமே. அதை தவிர ஓட்டப் பந்தயம் நடத்தவும், விபத்துக்களை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கவும் அல்ல.

எனவே அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

18 வயதுக்கு குறைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை செலுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகளவில் ஏற்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டு அதிக வேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

ஹொரணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இரவு வேளையில் மின்விளக்குகள் இன்றி, வீதி ஒழுங்குகளை மீறி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 17 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் மோதி உயிரிழந்த சம்பவம் இன்றைய இளைஞர்களின் அபாயகரமான போக்கை சுட்டிக்காட்டுகிறது.

இளைஞர்களின் இந்த செயற்பாடு மிகவும் ஆபத்தானது. இனி வரும் காலங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.