பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

15 0

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பேஸ்லைன் வீதியை விரிவாக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக கிருலப்பன சந்தியிலிருந்து கொழும்பு – ஹொறண வீதியின் துட்டகைமுனு வீதி வரையான 0.86 கிலோமீற்றர் தூரத்துக்கு 6 வழிச்சாலைகளை அமைப்பதற்காக 2009.11.11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பாரியளவிலான அபிவிருத்தித் திட்ட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இத்திட்டம் எமது நாட்டின் தேசிய வீதிகள் பிரதான திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திப் பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் 90 வீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொழும்பு – ஹொரணை வீதியின் பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்களவு குறைவதுடன், நகர்ப்புற நடமாட்டம், பொருளாதார உற்பத்தித் திறன் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.