ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், சிரியா நாட்டு அகதிகளை சிரியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் அந்நாட்டின் ஜனாதிபதியிடம் பேச இருக்கிறார்.
ஏஞ்சலா மெர்க்கல் ஜேர்மனியின் சேன்ஸலராக இருந்தபோது, சிரியா உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி ஓடி வந்த அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்.
ஆனால், மெர்ஸ் தலைமையிலான தற்போதைய அரசோ, சில உலக நாடுகளைப்போல, புலம்பெயர்தலை பிரச்சினையாக, அரசியலாக பார்க்கிறது.
ஆக, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, ஜேர்மன் மக்களை சமாதானப்படுத்துவதற்காக, சிரிய அகதிகளை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது ஜேர்மன் அரசு. இந்நிலையில், சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அஹ்மத் அல் ஷரா, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அல் ஷரா ஜேர்மனிக்கு வரும்போது, அவரிடம், ’நாங்கள் சிரியாவுடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம், புதிய அரசுடன் ஒரு புதிய துவக்கமாக இந்த உறவுகள் அமையட்டும்’ என மெர்ஸ் கூறப்போவதாக அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ’உங்களுடன் விவாதிக்க பல பிரச்சினைகளும் உள்ளன, அவற்றில் ஒன்று, சிரிய அகதிகளை உங்கள் நாட்டுக்கே திரும்ப அனுப்புவது’ என்றும், அல் அஷராவிடம் மெர்ஸ் கூற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

