லஹுகல தேசிய பூங்காவில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு பிணை!

5 0

லஹுகல தேசிய பூங்காவின் பன்சல்கொட பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட விலங்குகளுடன் தப்பியோடிய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

லஹுகல தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலயடுத்து, அப்பகுதியில் விசேட சோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்கள் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடினர்.

தப்பியோடிய சந்தேக நபர்கள் விட்டுச் சென்ற பையைச் சோதனையிட்ட போது, அதில் சுடப்பட்ட நிலையில் எலிமான் மற்றும் இரண்டு உடும்புகளும் ஒரு கோடரியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், டிசம்பர் 20 ஆம் திகதி பொத்துவில் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் சந்தேக நபர்கள் ஜனவரி 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.