குருக்கள்மடத்தில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே வாக்குவாதம் ; இருவர் காயம்!

12 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை (15) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் போக்குவரத்து பொலிஸார் வீதிச்சோதனை நடாத்திய நிலையில் ரோச் லைட் அடித்து மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தமுற்பட்டுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறிச்சென்ற நிலையில், பொலிஸார் அதனை நிறுத்த முற்பட்டபோது இந்த நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கிய போது இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த பின்னரும் போக்குவரத்து பொலிஸார் அவர்களை தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு காரிலும் பொலிஸ் வாகனத்திலும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளபோதும் கெல்மட்டினால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடுகள் எனவும் இதன்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டதுடன் தாக்குதல் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.