“நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையானது” – நிருக்ஷ குமார கடும் தாக்கு

9 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளியவர்களுக்கு மக்கள் குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்த நாட்டு மக்கள் எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் நின்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தபோது, இந்த விமல் வீரவங்ச எங்கே மறைந்திருந்தார் என கேள்வி எழுப்பிய அவர், ராஜபக்சக்களுடன் இணைந்து நாட்டை திவாலாக்கியதில் இவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் கடந்த காலங்களில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தைப் பயன்படுத்தியதாகச் சாடிய நிருக்ஷ குமார, ஒரு அப்பாவி வைத்தியர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும், பெண்களுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தும் சமூகத்தில் அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்தனர் எனக் குறிப்பிட்டார்.

தற்போது கல்வி மறுசீரமைப்பில் உள்ள பாலினக் கல்வி தொடர்பான விடயங்களைத் தவறாகச் சித்தரித்து, விமல் வீரவங்ச அரசியல் லாபம் தேட முயல்வதாகவும், எட்டு வகுப்பு கூடத் தேறாத அவருக்கு கல்வி மறுசீரமைப்பு பற்றிப் பேச தகுதி இல்லை என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சராக இருந்தபோது அனுபவித்த சொகுசு வாழ்க்கை மற்றும் சலுகைகள் பறிபோன விரக்தியில் விமல் வீரவங்ச தற்போது வீதிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால், நாட்டைச் சூறையாடியவர்களுக்கு எதிராகத் தான் போராடியிருக்க வேண்டும் என்றார்.

இறுதியாக, இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி குளிர் காய்ந்தவர்களின் இந்த நாடகம் இனி செல்லுபடியாகாது என்றும், முடிந்தால் உண்மையாகவே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காட்டுங்கள் என்றும் விமல் வீரவங்சவுக்கு நிருக்ஷ குமார சவால் விடுத்தார்.